பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்; மண்பானை, கரும்புகள் விற்பனை தீவிரம்


பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்; மண்பானை, கரும்புகள் விற்பனை தீவிரம்
x

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். மண்பானை, கரும்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். மண்பானை, கரும்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

பொங்கல் பொருட்கள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பொருட்களை வாங்க கடைவீதிகளில் மக்கள் நேற்று திரண்டனர். அதன்படி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், பொங்கல் பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்தனர். பின்னர் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். அதோடு பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட அளவுகளில் ரெடிமேடாக வைத்து விற்கப்பட்டன. அவற்றையும் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதன் காரணமாக திண்டுக்கல் கடைவீதி, மேற்கு ரதவீதியில் உள்ள பலசரக்கு கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதேபோல் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்க விரும்பியவர்கள் குறிப்பிட்ட அளவுகளில் மண் பானைகளை வாங்கிச்சென்றனர். ஒரு பானை குறைந்தபட்சம் ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதிலும் பொதுமக்கள் அவற்றை வாங்கிச்சென்றனர்.

கரும்புகள் விற்பனை

பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது சர்க்கரை பொங்கலும், கரும்பும் தான். திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி, சாணார்பட்டி, நத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் திண்டுக்கல்லில் கரும்பு விற்பனையில் நேற்று ஈடுபட்டனர். நாகல்நகர், காந்திமார்க்கெட், திருச்சி சாலை உள்பட நகரின் முக்கிய இடங்களில் கரும்புகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஒரு ஜோடி கரும்பு ரூ.120-க்கும், 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.450 வரையும் விற்பனை ஆகின. நள்ளிரவு வரை கரும்புகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

இரவு நேரம் நெருங்கியதும், கரும்பு சிறிதளவு விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர சாலையோரத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு மஞ்சள் குலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.60 வரை விற்கப்பட்டது. மேலும் கூரைப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை அடங்கிய ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனை ஆனது.

புத்தாடைகள்

இதுதவிர பொங்கல் தினத்தன்று வீடுகளின் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு பண்டிகையை கொண்டாடுவார்கள். இதற்காக நகரின் பல இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல வண்ண கோலப்பொடிகளையும் ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது.

பொங்கல் கொண்டாட்டத்தில் பொங்கல் பொருட்களுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பிடிப்பது புத்தாடைகள் ஆகும். எனவே திண்டுக்கல்லில் உள்ள ஜவுளிக்கடைகளில் ஆடைகளை வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பண்டிகையையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜவுளிக்கடைகளில் பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகைைய முன்னிட்டு திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விற்பனையும் அமோகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 22 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் திண்டுக்கல்லில் கடந்த 2 நாட்களாக பூக்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

பொங்கல் பொருட்களை வாங்குவதற்காக திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் திண்டுக்கல்லில் குவிந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் பஸ் நிலைய பகுதி, கடைவீதி, ரதவீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதிகளுக்கு போலீசார் விரைந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


Next Story