கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்கு வாதம்
விரிஞ்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
விரிஞ்சிபுரத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் சுதாகரன், வட்டார வளர்ச்சி அதிகாரி சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வரவேற்றார்.
சிறப்பு அலுவலராக மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி கலந்து கொண்டார். தீர்மானங்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தரப்பினர் எங்கள் பகுதியில் இதுவரை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றவில்லை, கழிப்பறை வசதி கூட இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். கழுவுநீர் கால்வாய் கட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெண்டர் விட்டும் இன்னும் கழிவுநீர் கால்வாய் கட்டப்படவில்லை எனக்கூறி அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து பணிகள் குறித்து ஆய்வு செய்து 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.