பொதுமக்கள் கோரிக்கை


பொதுமக்கள் கோரிக்கை
x

திருமருகல் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்திற்கு மின் இணைப்பு மாற்றித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திருமருகல் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்திற்கு மின் இணைப்பு மாற்றித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய மின்கம்பம் அமைப்பு

திருமருகல் ஊராட்சி கல்லுளி திருவாசல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு திருமருகல் துணை மின்நிலையத்திலிருந்து மின்கம்பங்கள் சாலையோரம் அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கல்லுளி திருவாசல் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. அதற்கு மாற்றாக 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டது. மின்கம்பம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளை கடந்தும் இன்று வரை மின் இணைப்பை புதிய மின்கம்பத்திற்கு மாற்றப்படாமல் உள்ளது. இதனால் பழைய சேதமடைந்த மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.

குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் இந்த மின்கம்பம் இருப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் அந்த பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

மின் இணைப்பை மாற்றித்தர வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்திற்கு மின் இணைப்பை மாற்றித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story