கலை பொருட்களின் களஞ்சியமாக திகழும் திருவாரூர் அருங்காட்சியகம் இடமாற்றப்படுமா?
திருவாரூர் அருங்காட்சியகம் கலை பொருட்களின் களஞ்சியமாக திகழ்கிறது. இங்கு பழங்கால சிலைகளை காட்சிப்படுத்த இடவசதி இல்லை. எனவே அருங்காட்சியகத்தை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவாரூர் அருங்காட்சியகம் கலை பொருட்களின் களஞ்சியமாக திகழ்கிறது. இங்கு பழங்கால சிலைகளை காட்சிப்படுத்த இடவசதி இல்லை. எனவே அருங்காட்சியகத்தை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம் என்பது அரிய பொருட்களின் பொக்கிஷமாக திகழ்கிறது. கலாசாரம், கலை, அறிவியல் மற்றும் பல்வேறு பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்படும் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்படும் பொருட்கள் நமது கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அரசு அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. இவை சிறந்த பொழுதுபோக்கு தலங்களாகவும், குழந்தைகளுக்கு அறிவூட்டும் தலங்களாகவும் உள்ளன.
தியாகராஜர் கோவிலில்...
திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் அரசு அருங்காட்சியகம் கடந்த 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் பாதி இடம் கோவில் அலுவலக பயன்பாட்டில் உள்ளது. 2,500 சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.
இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய நாரினாலா பொருட்கள், இலங்கை, சிங்கப்பூர், பிரான்சு, மலேசிய நாணயங்கள், வாத்திய கருவிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நடராஜர் சிலை
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலத்துக்கு அடியில் இருந்து கிடைத்த புராதன பொருட்கள், சாமி சிலைகள், படிவங்கள் திருவாரூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள அழகிய நடராஜர் சிலை குடவாசல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். கலைநயமிக்க இந்த சிலை காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
கி.மு.2-ம் நூற்றாண்டு காலத்தில் இறந்தவர்களை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் தாழியில் வைத்து புதைப்பார்கள். முதுமக்கள் தாழி என அழைக்கப்படும் இந்த தாழி, வலங்கைமான் ஆவூர் கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாதிரம் தோண்டும்போது கிடைத்தது. இதை பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவாரூர் அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
பழங்கால கருவிகள்
பழங்கால மக்கள் பயன்படுத்திய கோடாரி, வெட்டும் கத்தி, அரிவாள், கற்கருவிகள் மற்றும் உயிரினங்களின் படிமங்கள், தோல் பொருட்கள் ஆகியவை தனித்தனி கண்ணாடி பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.
கலை பொருட்களின் களஞ்சியமாக திகழும் இந்த அருங்காட்சியகத்தில் மேலும் பல்வேறு அரிய சிலைகள் மற்றும் கலை பொருட்களை வைக்க இடவசதி இல்லை. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்கால சாமி சிலைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள தலைமை அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இடமாற்ற வேண்டும்
இதுகுறித்து திருவாரூர் சேவை அமைப்பின் நிர்வாகி வரதராஜன்:- திருவாரூரில் அருங்காட்சியகம் தியாகராஜர் கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் போதிய இடவசதியின்றி செயல்படுகிறது. புதிதாக கண்டெடுக்கப்படும் சிலைகளை இங்கு காட்சிப்படுத்த முடியாது. இந்த அருங்காட்சியகத்தை பயன்பாடு இன்றி உள்ள திருவாரூர் நகராட்சி அலுவலக பழைய கட்டிடத்தில் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
திருவாரூர் நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி ரமேஷ்:- அருங்காட்சியகம் மூலமாக இளம் தலைமுறையினர் பழமையின் அருமையை அறிந்து கொள்ள முடியும். ஆனால் திருவாரூரில் அருங்காட்சியகம் இருப்பதே வெளியே தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது. பிரம்மாண்டமாக அமைய வேண்டிய திருவாரூர் அருங்காட்சியகம், பெயரளவில் இடவசதியின்றி செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே இந்த அருங்காட்சியகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.