பாபநாசம் தாலுகாவில் 6 ஊராட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும்- கிராம மக்கள் கோரிக்கை


பாபநாசம் தாலுகாவில் 6 ஊராட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும்- கிராம மக்கள் கோரிக்கை
x

பாபநாசம் தாலுகாவில் 6 ஊராட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகாவில் 6 ஊராட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்துடன் இணைப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகாவில் இருந்து அன்னுக்குடி, உத்தமதானபுரம், மூலாழ்வாஞ்சேரி, நல்லூர், மதகரம், மணலூர் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 8 வருவாய் கிராமங்கள் கடந்த 1996-ம் ஆண்டு யூனியன் வாரியாக பிரிக்கப்பட்டு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இந்த ஊராட்சிகள் பாபநாசத்தில் இருந்து சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டருக்கு உட்பட்ட தொலைவில் உள்ளன. ஆனால் வலங்கைமான் பகுதி சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

பஸ் வசதி

இந்த கிராமங்களில் இருந்து வலங்கைமானுக்கு நேரடியாக பஸ் வசதி கிடையாது. பாபநாசம் வந்து தான் வலங்கைமான் செல்ல வேண்டி உள்ளது. மேலும் சாலை விபத்துகள், வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடக்கும்போது வலங்கைமானில் இருந்து போலீசார் வருவதற்கும் தாமதமாகிறது. இந்த நிலையில் 6 ஊராட்சிகளையும் மீண்டும் பாபநாசம் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

ஐகோர்ட்டில் வழக்கு

இதையடுத்து 23.3.2001-ல் 6 ஊராட்சிகளையும் மீண்டும் பாபநாசம் தாலுகாவில் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தவில்லை. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி மீண்டும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் 6 ஊராட்சிகளையும் இணைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டத்தில் 6 ஊராட்சிகளையும் பாபநாசம் தாலுகாவில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனாலும் ஊராட்சிகளை மீண்டும் பாபநாசம் தாலுகாவில் ேசர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முதல்-அமைச்சருக்கு மனு

இதுகுறித்து தற்போது அன்னுக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, மதகரம் விவசாய சங்கத் தலைவர் வாசுதேவன், மற்றும் 6 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் 6 ஊராட்சிகளை பாபநாசம் தாலுகாவுடன் மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Next Story