மயானதிற்கு செல்ல பாதை வசதி வேண்டும்
மயானதிற்கு செல்ல பாதை வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா, பாகனூர் ஊராட்சியை சேர்ந்தது பேராமங்கலம். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு ஊருக்கு தெற்கே மயானம் அமைந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்வதில் சிரமம் உள்ளது. வயல்வெளியின் வழியாக உடலை தூக்சி செல்லும் அவலம் உள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த சேது (வயது 97) என்பவர் வயது முதிர்வு காரணமாக இறந்தார். அவரது உடலை நெல் வயலின் நடுவே மயானத்திற்கு தூக்கி செல்வதற்கு அவரது உறவினர்கள் பெரும் அவதியை சந்திக்க நேரிட்டது. சேற்றில் நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே, மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.