மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்றும், மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்றும், மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ந்து வரும் நகரம்

திருச்சி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராக மண்ணச்சநல்லூர் உள்ளது. சட்டமன்ற தொகுதியின் தலைநகராகவும் விளங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளும், தனியார் கல்லூரியும் இயங்கி வருகிறது.

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். இதனால் ஏதாவது உடல் நலம் பாதிப்புஏற்பட்டால் இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தான் சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். மேலும், நீரிழிவு நோய்க்கு மாத்திரைகள் வாங்குவதற்கும் தினமும் 100-க்கணக்கானோர் வருகின்றனர். தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அடிப்படை வசதிகள்

இந்நிலையில், இங்கு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதில்லை என்றும், நோயாளிகளை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி படுக்கை வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சீட்டு வழங்குவதில் தாமதம்

மண்ணச்சநல்லூரில் சலூன் கடை வைத்திருக்கும் பால்ராஜ்:- மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சீட்டு வழங்கும் இடத்தில் சீட்டு வழங்கும்போது தாமதம் ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சீட்டு வாங்கிக் கொண்டு நோயாளிகள் டாக்டரை சந்திக்கின்ற நிலையில் அவர் அவசர, அவசரமாக பரிசோதனை செய்துவிட்டு துண்டு சீட்டில் மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். எனவே இதை தவிர்க்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே சீட்டு வழங்குவதற்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டு தனி ஆட்களை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக செல்லும்போது இரவு பணி பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சரிவர நோயாளிகளை கவனிப்பது இல்லை. இரவு பணி பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பெண் நோயாளிகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் செல்லும் நபர்களால் அச்சம் ஏற்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஆண் காவலர்களை நியமித்து டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பெண் நோயாளிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும்.

இரவு நேர சிகிச்சை

மண்ணச்சநல்லூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கரூரைச் சேர்ந்த தேவி:- மண்ணச்சநல்லூரில் உள்ள எனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக கரூரிலிருந்து நான் எனது குடும்பத்தினருடன் இங்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து எனது உறவினர்கள் இங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து என்னுடைய உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து முறையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளிக்கின்றனர். இது எனக்கு திருப்தியாகவும், ஆரோக்கியத்தையும் தந்துள்ளது. இரவு நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மண்ணச்சநல்லூரை சேர்ந்த வடிவேல்:- நான் வாகனத்தில் செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து விட்டேன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான் தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றால் பணம் செலவாகுமே என்று எண்ணி மண்ணச்சநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தேன். தொடர்ந்து, என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் உள் நோயாளியாக அனுமதித்து தகுந்த சிகிச்சை அளித்து முறையான மருந்து மாத்திரைகளை கொடுத்து வருகின்றனர். நான் தற்போது உடல்நிலை தேறி வருகிறேன். இரவு நேரத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.

கூடுதல் படுக்கை வசதி

திருப்பைஞ்சீலி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா:- நான் என்னுடைய சொந்த ஊரான முருங்கப்பட்டியில் இருந்து திருப்பைஞ்சீலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன்.இந்நிலையில் பள்ளிக்கு வந்த போது திடீரென மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகியோர் என்னை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.தொடர்ந்து என்னை அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உடனடியாக என்னை பரிசோதனை செய்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். என்னை கனிவோடு நன்றாக பேசி சிகிச்சை அளித்தனர்.இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இந்த மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்திதர வேண்டும்.

மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த துர்கா:-

என்னுடைய குழந்தைக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தேன். உடனே மருத்துவர் மற்றும் நர்சுகள் என்னுடைய குழந்தையை பரிசோதனை செய்து உடனடியாக குளுக்கோஸ் ஏற்றினார்கள். மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வந்து என்னுடைய குழந்தையின் ஆரோக்கியத்தை கவனித்தும், என்னிடம் கேட்டும் செல்கின்றனர். அரசு மருத்துவமனையில் சரியாக கவனிக்க மாட்டார்கள் என்று கூறிவரும் நிலையில் இங்கு பணியாற்றும் அனைவரும் சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கனிவோடு

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி கூறும்போது, நோயாளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்திருக்கிறோம். சில நேரங்களில் மருந்து மாத்திரைகள் இல்லை என்றாலும் வெளியில் இருந்து வரவழைத்து நோயாளிகளுக்கு உரிய மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறோம். இந்த மருத்துவமனையில் தலைமை டாக்டரையும் சேர்த்து 7 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 50 படுக்கை வசதிகள் அமைக்க அனுமதி இருந்தும், இடம் பற்றாக்குறை காரணமாக 30 படுக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையின் பின்பக்கம் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக கட்டிடம் கட்டிக் கொடுத்தால் மேற்கொண்டு 20 படுக்கை வசதிகளை அங்கே அமைத்து கூடுதலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மேலும், எக்ஸ்ரே எடுப்பதற்கு கூடுதல் வசதி தேவை. இங்குள்ள நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் போது கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட், சமயபுரம், மற்றும் சிறுகனூர் பகுதிகளில் இருந்து தான் 108 ஆம்புலன்சை வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு என்று தனியாக, எப்போதும் தயாராக இருக்கக்கூடிய வகையில் 108 ஆம்புலன்ஸ் வசதி இருந்தால் இங்கிருந்து நோயாளிகளை விரைவாக அனுப்பி வைக்க முடியும். இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அனைவரிடமும் எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகுந்த கனிவோடும் அன்போடும் நடந்து கொள்கின்றனர் என்றார்.


Next Story