பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பந்தலூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2, பழைய நெல்லியாளம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருவதற்கும் பழைய நெல்லியாளம் வழியாக சென்று வருகின்றனர். அங்கிருந்து உப்பட்டி, பந்தலூர், கூடலூர், பாட்டவயல் பகுதிகளுக்கு செல்கிறார்கள்.
இந்தநிலையில் நெல்லியாளம் டேன்டீ ரேஞ்ச் எண்.2 முதல் பழைய நெல்லியாளம் வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பள்ளி வாகனங்கள், பச்சை தேயிலை மூட்டைகளை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகின்றன. இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். பழுதடைந்த சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.