கடலூர் மாவட்டத்தில் உருக்குலைந்த சாலைகளால் நத்தை வேகத்தில் நகரும் வாகனங்கள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில் உருக்குலைந்த சாலைகளால் வாகனங்கள் நத்தை வேகத்தில் நகா்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி, மாநில அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சாலைகள் மற்றும் மேம்பாலங்களின் கட்டமைப்பு மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலை கட்டமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பராமரிக்கப்படுகிறது.
பஞ்சர் ஒட்டப்படும் சாலை
3,703 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ள கடலூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் மொத்தம் 1862 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளது. இதில் மாநில சாலைகள் 249.133 கி.மீ, மாவட்ட சாலைகள் 448.619 கி.மீ., இதர மாவட்ட சாலைகள் 959.559 கி.மீ. நீளமும், இதர சாலைகள் 205.646 கி.மீ. நீளமும் உள்ளன.
இதில் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் எந்தவொரு சாலைகளும் முறையாக சீரமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டாலும், அதில் பஞ்சர் மட்டும் ஒட்டப்படுகிறதே தவிர, சாலையை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
குறிப்பாக மாவட்டத்தில் சுமார் 45 கி.மீ. நீளமுள்ள கடலூர்-சிதம்பரம் சாலை பல இடங்களில் உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால் கடலூரில் இருந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சிதம்பரம் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 45 கி.மீ. சாலையை கடந்த காலங்களில் ஒரு மணி நேரத்திற்குள் கடந்த நிலையில், தற்போது 2 மணி நேரமாகிறது. அதாவது அந்த சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நத்தைபோல் ஊர்ந்தபடி தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதோடு, பலர் உடல்வலியால் அவதிப்படுகின்றனர்.
கண்டும், காணாமல் செல்லும் அதிகாரிகள்
இதேபோல் விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை பழத்தோட்டம் வழியாக உளுந்தூர்பேட்டை செல்லும் புறவழிச்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி. சி.எஸ்.ஆர். நிதியில் அமைக்கப்பட்டது. இந்த சாலையை என்.எல்.சி. நிர்வாகம் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்காததால், அந்த சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. விருத்தாசலம் டவுன் வழியாக உளுந்தூர்பேட்டைக்கு செல்லாமல் புறவழிச்சாலையாக செல்லும் வகையில் இந்த சாலை உருவாக்கப்பட்டது. தற்போது இந்த சாலையை யார் சீரமைப்பது என்ற போட்டி நிலவி வருகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக மாவட்ட கலெக்டர், அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் பலர் இந்த சாலையை தான் அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களும் கண்டும் காணாமலும் சென்று வருவதால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதிகரிக்கும் விபத்துகள்
இதேபோல் விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலை விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், கே.என்.பேட்டை உள்ளிட்ட பகுதியிலும், பெரியப்பட்டு அருகிலும் பல இடங்களில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பணிகளும் மந்தகதியில் நடப்பதால், வாகன ஓட்டிகள் தினம் தினம் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்கள் குண்டும், குழியுமான சாலையின் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் காணப்படும் சாலைகளால் சிரமத்தை சந்திக்கும் மக்கள், அதுபற்றி தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
புழுதி மண்டலம்
சிதம்பரம் உதயஜோதி: சிதம்பரம் பொய்யாபிள்ளை சாவடி, சீர்காழி செல்லும் புறவழிச்சாலை, புவனகிரி செல்லும் புறவழிச்சாலை வரை உள்ள சாலை படுமோசமாக காட்சியளிக்கிறது. சாலை என்றே கூற முடியாத அளவிற்கு முற்றிலும் உருக்குலைந்து கிடக்கும் அந்த சாலை வழியாக செல்வதே ஒரு சாகச பயணம் போல் தான் தோன்றுகிறது. எந்நேரமும் செல்லும் வாகனங்களால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சிதம்பரம் ஓமக்குளம் செல்லும் சாலை உள்பட நகரில் பல்வேறு பகுதியில் உள்ள சாலைகள் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரமைக்க வேண்டும்
கொரக்கவாடி சக்திவேல்: திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் பல இடங்களில் நெடுஞ்சாலையின் நடுவில் பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து இரவு நேரத்தில் அவ்வழியாக பயணிப்பவர்கள் சாலையின் நடுவில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால் தான் ராமநத்தம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், எங்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தான் செவிசாய்த்தபாடில்லை. அதனால் இனியாவது காலம் தாமதிக்காமல் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
பணம் வசூலிக்க காட்டும் ஆர்வம்
பரவலூர் சக்தி: கடலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாலகரம், நயினார்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் இந்த சாலை தான் சுங்க சாலை போல அல்லாமல் கிராம சாலையை போல காட்சியளிக்கிறது. ஆங்காங்கே சாலைகள் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பரவலூர் - விளாங்காட்டூர் இடையே சாலைகள் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டும், மேடு பள்ளமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது டயர் வெடித்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சமீபத்தில் கூட கொடுக்கூர் அருகே இந்த சாலையில் சென்ற ஒரு கார் திடீரென டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்தது. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அந்த காரில் பயணம் செய்த யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க காட்டும் ஆர்வத்தை சாலையை தரமாக பராமரிப்பதிலும் காட்ட வேண்டும். அப்போது தான் சாலையில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகள் தவிர்க்கப்படும்.