மின்கம்பிகளை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மின்கம்பிகளை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சீர்காழி
சீர்காழி அருகே உள்ள திருப்புன்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் அருகருகே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளில் திடீர், திடீரென தீப்பொறி ஏற்பட்டு கூரைகள் மீது விழுகின்றன. மின்கம்பிகள் தொங்குவதால் வீட்டின் மீது ஏறி நின்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. மேலும், அடிக்கடி இடி-மின்னலுடன் கோடை மழை பெய்து வருவதால் எப்போது மின்கம்பிகள் அறுந்து விழுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெரிய தெருவில் கூரை வீடுகளுக்கு மேல் மின் கம்பிகள் தொங்கிக் கொண்டு இருப்பதால் வீடுகளின் மேற்பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மேலும், அடிக்கடி மின் விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் புதிதாக வீடு கட்ட முடியவில்லை. தற்போது மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, எங்கள் பகுதியிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.