புதர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறிய சமுதாய நலக்கூடம்-மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேவூர் அருகே புதர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறிய சமுதாய நலக்கூடத்தை மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவூர்:
ஜாதி, மதங்களை கடந்து...
ஜாதி, மத, மொழி, இன அடையாளங்களை கடந்து அனைத்து தரப்பினரும் திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, பிறந்த நாள் உள்ளிட்ட விழாக்கள், அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை குறைந்த செலவில் நடத்த கட்டப்பட்டது தான் சமுதாய நலக்கூடம். இது தமிழக ஆட்சியாளர்கள் செய்த சாதனைகளில் ஒரு மைல்கல் என்றே கூறலாம். இன்றும் பல இடங்களில் அரசின் சார்பில் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கோனேரிப்பட்டி ஊராட்சி வெள்ளாளபாளையத்தில் காவிரி ஆற்றங்கரை பகுதியில் கடந்த 2,000-ம் ஆண்டில் சங்ககிரி ஒன்றியம் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு, திறப்பு விழா கண்டது. ஆரம்ப கால கட்டத்தில் அந்த சமுதாய நலக்கூடத்தில் பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை-எளியோர் தங்களது குடும்ப விழாக்களை நடத்தி வந்தனர். அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்த இந்த சமுதாய நலக்கூடம் நாளடைவில் முறையாக பராமரிக்கப்படவில்லை.
விஷ ஜந்துகளின் கூடாரம்
இதனால் கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் மற்றும் தரைகள் பெயர்ந்து அபாய நிலைக்கு சென்றது. எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தால் பொதுமக்களால் அந்த சமுதாய நலக்கூடம் புறக்கணிக்கப்பட்டது. இதனால் புதர்களின் பிடியில் சமுதாய நலக்கூடம் சிக்கியது. தற்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் கூடாரமாக அந்த சமுதாய நலக்கூடம் மாறி உள்ளது. அந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமுதாய நலக்கூடம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், கோனேரிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 15 கிலோ மீட்டர் தொலைவில் எடப்பாடியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்களது குடும்ப விழாக்களை நடத்தி வருகின்றனர். ரூ.1 லட்சம் வரை மண்டபத்துக்கான வாடகை மட்டுமே செலுத்த வேண்டி உள்ளது. வசதியற்ற ஏழை, எளியோர் தங்களது வீடுகளிலேயே விழாக்களை நடத்துகின்றனர். இதனால் போதிய இட வசதி இல்லாமல் விழாக்களில் உற்சாகம் குறைகிறது.
எனவே சமுதாய நலக்கூடத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ஏழை, எளியோர் பாதிப்பு
வெள்ளாளபாளையத்தை சேர்ந்த ராயப்பன்:-
கோனேரிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு மதத்தினரும், அனைத்து சாதியினரும் வசித்து வருகிறார்கள். ஜாதி, மதங்களை கடந்து அனைத்து விதமான விழாக்களை நடத்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டி, திறக்கப்பட்டது. பின்னர் அது முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக விழாக்களை நடத்த முடியாமல் ஏழை, எளியோர் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சமுதாய நலக்கூடத்தை முறையாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
விவசாயி இதயக்கனி:-
கோனேரிப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் இடமாக வெள்ளாளபாளையம் சமுதாய நலக்கூடம் திகழ்ந்தது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி பல்வேறு நிகழ்ச்சிகளை அதில் நடத்தி உள்ளனர். தற்போது அந்த சமுதாய நலக்கூடம் குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளினின்றி காணப்படுகிறது. இந்த தேவைகளை நிறைவேற்றி, சமுதாய நலக்கூடத்தை முறையாக பராமரித்தால் குறைந்த வாடகையில் மீண்டும் அனைத்து விழாக்களையும் நடத்த முடியும்.
கோவில் விழாக்கள்
மீன் பிடி தொழிலாளி வீரமணி:-
வெள்ளாளபாளையம் காவிரி ஆறு புனித தீர்த்த தளமாக கருதப்படுகிறது. இதனால் சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவில் விழாவுக்காக இங்கிருந்து காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்க வசதியாக இந்த சமுதாய நலக்கூடம் நிகழ்ந்தது. மேலும் அவர்களுக்கு அன்னதானம் வழங்கவும், சாமிகளுக்கு பூஜை செய்யவும் சமுதாய நலக்கூடம் பயன்பட்டு வந்தது. தற்போது சிமெண்டு பூச்சுகள் பெயந்து அபாயகரமாக காட்சி அளிப்பதால் சமுதாய நலக்கூடத்தை யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே அதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சீரமைத்து விழாக்கள் நடைபெறும் பட்சத்தில் ஊராட்சி நிர்வாகத்துக்கு வருமானம் கிடைக்கும்.
சமூக ஆர்வலம் ஜெயபிரகாஷ்:-
கோனேரிப்பட்டியை சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக வெள்ளாளபாளையம் காவிரி ஆறு உள்ளது. மேலும் இந்த பகுதியில் தான் மிகவும் பழமை வாய்ந்த ஓங்காளியம்மன் கோவில், விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு திருமணம் செய்வோர் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த கோவில் விழாக்களின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சமுதாய நலக்கூடம் பயன்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய பராமரிப்பில்லாமல் சமுதாய நலக்கூடம் உள்ளது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி உள்ளது. அதன் அருகே செல்வதற்கு கூட பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அதை இடித்து விட்டு, புதிய சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.