கள்ளக்குறிச்சி பகுதி அரசு பொது சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


கள்ளக்குறிச்சி பகுதி அரசு பொது சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பகுதி அரசு பொது சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளி மற்றும் மேல்படிப்பு பயிலவும், அரசு பணியில் சேரவும், போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், கடனுதவி பெறுதல் உள்பட பல்வேறு தேவைகளுக்காக வருமானம், சாதி, குடியிருப்பு, முதல் பட்டதாரி, விதவை, இறப்பு, வாரிசு சான்று மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுதல், பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், பட்டா பெயர் மாற்றம் போன்ற அனைத்து தேவைகளுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதையடுத்து அந்த விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து தனி தாசில்தார், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்த பிறகு சான்று வழங்கப்படும். இதனால் விண்ணப்பித்து காலதாமதம் ஆனதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

பொது சேவை மையம்

இந்த நிலையில் அரசு பொது சேவை மையம் தொடங்கி அதன் மூலம் உடனடியாக சான்றுகள் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அரசு கொண்டு வந்தது. மேலும் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், தனி நபர்களுக்கும் அரசு அனுமதி வழங்கி பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

கூடுதலாக ரூ.40 வசூல்

கள்ளக்குறிச்சியில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் நகர பகுதிகளில் தனி நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சான்றுக்கு விண்ணப்பிக்க ரூ.60 கட்டணம் பெற வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி சான்று விண்ணப்பித்தவுடன் ரசீது வழங்கப்பட வேணடும் அதில் கட்டணம் ரூ.60 என குறிப்பிட்டிருக்கும். ஆனால் அதற்கு பொதுசேவை மையங்களில் ரூ.60-க்கு பதில் ரூ.100 வசூல் செய்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ஏழைகள், மாணவர்கள் பெரும் சிரமமடைகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

இதுகுறித்து நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், அரசு அலுவலகம் மற்றும் தனியார் (இ-சேவை மையம்) பொது சேவை மையத்தில் வருமானம், சாதி, குடியிருப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்காக விண்ணப்பிக்கும் போது ஒரு சான்றுக்கு ரூ.60 செலுத்த வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் அரசு மற்றும் தனியார் பொது சேவை மையங்களில் ஒவ்வொரு சான்றுக்கும் கூடுதலாக 40 ரூபாயை சேர்த்து ரூ.100 வசூல் செய்கின்றனர். எனவே மாவட்ட அதிகாரிகள் அனைத்து பொது சேவை மையங்களிலும் திடீர் ஆய்வு செய்து, இதுபோல் கூடுதல் தொகை வசூல் செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கட்டாய வசூல்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த சங்கர் கூறுகையில், இ-சேவை மையங்களில் பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பித்தவுடன் ரூ.60 என ஒப்புகை சீட்டு தருகின்றனர். ஆனால் கூடுதலாக ரூ.40 சேர்த்து ரூ.100 தரவேண்டும் என கட்டாய வசூல் செய்கின்றனர். ஏன் அதிக கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டால், இன்டர்நெட் சார்ஜ், ஸ்கேனிங் சார்ஜ் என கூறுகின்றனர். இந்த கட்டாய வசூல் அனைத்து சேவை மையத்திலும் நடக்கிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story