தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சேலம்

தம்மம்பட்டி:

பழுதான சாலை

தம்மம்பட்டி பேரூராட்சி 17-வது வார்டு சந்தை ரோடு பகுதியில் சீரமைப்பு பணிக்காக சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தோண்டப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை புழுதி காடாக காட்சி அளிக்கிறது. இதற்கிடையே அதே பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகள் பழுதாகி கிடக்கிறது. இதையும் சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் இவர்களது கோரிக்கையை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அங்கு தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அந்த பகுதி கவுன்சிலர் திருச்செல்வம், இதுதொடர்பாக செயல் அலுவலர் சத்தியமூர்த்தியிடம் முறையிட்டனர்.

பின்னர் பேரூராட்சி தலைவியின் கணவர் கவுன்சிலர் ராஜா, செயல் அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு மாதத்துக்குள் சாலை சீரமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story