அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில்பொதுமக்கள் தர்ணா போராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சேலம் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புகாரர் தெருவில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாததால் அங்குள்ள பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி கொண்டலாம்பட்டி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி நேற்று காலை சுண்ணாம்புகாரர தெருவில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். இதையடுத்து ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.