ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

வடகரையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

வடகரையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில், ஆம்பூர் அருகே உள்ள வடகரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வாசுகி ஊர் பொதுமக்களுடன் வந்து தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களும், பள்ளி மாணவிகளும் பாதிக்கப்படும் அவலங்களை போட்டோவாக எடுத்து வந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

இதனால் ஆவேசம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வடகரை டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேரை கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளே அனுப்பினர்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், வடகரை ஊராட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, வடகரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துைண கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story