தாலுகா அலுவலகங்களில் நாளை பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்


தாலுகா அலுவலகங்களில் நாளை பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
x

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் முகாம்

சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் தாலுகா வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பொதுமக்கள் பொது வினியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

ரேஷன் கார்டில் பெயர்

முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு அல்லது அதன் நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், செல்போன் எண் பதிவு, செல்போன் எண் மாற்றம் செய்வதற்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும். பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் சந்தையில் விற்கப்படும் ரேஷன் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story