ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்


ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்
x

தை அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

திருச்சி

தை அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

தை அமாவாசை

இந்துக்கள் அமாவாசை தினத்தில் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதன் மூலம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து தங்களது குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த தினங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் திதி கொடுத்து வழிபாடு செய்ததற்கு சமமானதாக கருதப்படுகிறது. எனவே ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் ஏராளமான அளவில் புண்ணிய நதிகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.

முன்னோர்களுக்கு திதி

இந்தநிலையில் தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சியில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கருடமண்டபம், அய்யாளம்மன் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பொதுமக்கள் குவிந்தனர்.

திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் குடும்பத்துடன் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

பூஜைகள்

இதற்காக ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் மூலம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொதுமக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்தனர்.

பின்னர், அங்கிருந்த பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். மேலும் தை அமாவாசையையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

இதையொட்டி திருச்சி மாநகர போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் படித்துறை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

பாக்ஸ்


Next Story