பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்:காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்ஆசிரிய-ஆசிரியைகள் கோரிக்கை மனு


பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்:காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்ஆசிரிய-ஆசிரியைகள் கோரிக்கை மனு
x

காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசிரிய-ஆசிரியைகள் கோரிக்கை மனு அளித்தனா்

ஈரோடு

காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரிய-ஆசிரியைகள் மனு கொடுத்தனர்.

ஊக்கத்தொகை

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களாக 296 பேர் பணியாற்றி வருகிறோம். தற்போது 80-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. எங்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. சிலருக்கு 4 மாதங்களாக ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. எனவே நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஊக்கத்தொகையில் கூடுதலாக ரூ.2 ஆயிரத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், பணி நேரத்தையும், வேலையையும் வரன்முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

பொதுக்கழிப்பிடம்

காஞ்சிக்கோவில் அருகே உள்ள கொளத்தான்வலசு புதிய காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு பொதுக்கழிப்பறை வசதி இல்லை. இதனால் நாங்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும், பெண்கள், சிறுமிகள் அதிகம் சிரமப்படுகிறார்கள். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோாிக்கை விடுத்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "நாங்கள் 3 தலைமுறைகளாக சென்னம்பட்டி காலனியில் வசித்து வருகிறோம். எங்களது முன்னோர்கள் 12 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அவர்களது வாரிசுகளான நாங்கள் 46 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தபோது ரயத்து புஞ்சை நிலமாக இருப்பதாக கூறி பட்டா வழங்க மறுக்கின்றனர். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.

காலை சிற்றுண்டி திட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடுக்கம்பாளையம் அரசு நிதி உதவி பெறும் சி.எஸ்.ஐ. தொடக்க பள்ளிக்கூடத்தின் ஆசிரிய-ஆசிரியைகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

அரசு தொடக்க பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் 20 சி.எஸ்.ஐ. தொடக்க பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். எனவே அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு போஸ்டல்நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் சாய, சலவை பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் என 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து சாயக்கழிவு நீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.

353 மனுக்கள்

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 353 மனுக்களை கொடுத்தனர். இதில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன், மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story