குமரியில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும்
நிபா வைரஸ் பரவலை தடுக்க குமரியில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். கேரளாவில் இருந்து வருபவர்களிடம் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தவும் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
நிபா வைரஸ் பரவலை தடுக்க குமரியில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். கேரளாவில் இருந்து வருபவர்களிடம் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தவும் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில்
நிபா வைரஸ் தொற்று குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் வழிகளான களியக்காவிளை, கோழிவிளை, காக்காவிளை, பளுகல் மற்றும் நெட்டா ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து சுகாதார ஆய்வாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் பரிசோதனை நடத்தி நோய் அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
புனேக்கு அனுப்ப அறிவுரை
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சந்தேகப்படுகிற நோயாளிகளிடமிருந்து மாதிரிகள் சேகரித்து உடனடியாக பரிசோதனைக்காக புனேக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் அறிகுறி கொண்ட நபர்கள் சிசிச்சைக்கு வந்தால் பொது சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் மூலம் நோய் கண்காணிப்பு பணி முழுமையான அளவில் நடைபெற்று வருவதுடன் அதன் மூலம் சந்தேகப்படும் நோயாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
முக கவசம்
கேரள மாநிலத்தில் இருந்து பணி நிமித்தமாக குமரிக்கு வரும் பொதுமக்களை கண்டறிந்து தொடர் கண்காணிப்பில் இருக்க செய்ய வேண்டும். மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, பொது சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுரி ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.