வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பொதுமக்கள் ஆர்வம்
75-வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி
75-வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுதந்திர தினம்
75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மட்டுமின்றி வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்காக வீடு, வீடாக தேசிய கொடி வினியோகமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது.
மரியாதை
ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், வீடுகள், கடைகளில் ஆர்வத்துடன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். மேலும் தங்களது வாகனங்களில் தேசிய கொடியை கட்டி உள்ளனர். காணும் இடங்களில் எல்லாம் தேசிய கொடி பறந்தவாறு இருப்பதை காண முடிந்தது.
இதேபோன்று கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் முழுவதும் தேசிய கொடியின் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்தது காண்போரை கவரும் வகையில் இருந்தது. மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பழங்குடியின கிராம மக்களும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் கோத்தர் பழங்குடியின கிராமமான புது கோத்தகிரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேசிய கொடிகள் வினியோகம் செய்யப்பட்டது.
விதிமுறைகள்
கூடலூர் நகரில் அனைத்து வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில் பொதுமக்கள், வியாபாரிகள் உணர்வுபூர்வமாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். மேலும் ஆட்டோக்கள் உள்பட தனியார் வாகனங்களிலும் தேசிய கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் அள்ளூர் வயல் உள்பட ஆதிவாசி கிராமங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இது தவிர போலீஸ் நிலையங்கள், வன அலுவலகங்களிலும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது.
ஊட்டியில் மெயின் பஜார், லோயர் பஜார், சேரிங்கிராஸ் பகுதிகளில் பெரும்பாலான வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. முன்னதாக வீடுகளில் தேசிய கொடி ஏற்ற நகராட்சி சார்பில் 23 ஆயிரம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை அதிகரித்தது. ஒரு சில இடங்களில் தேசிய கொடிகள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தேசிய கொடி ஏற்றும் போது விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தி உள்ளார்.