விளையாட்டு மைதானத்தில் முள்வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கொல்லங்ேகாடு அருகே விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகள் வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு:
கொல்லங்ேகாடு அருகே விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகள் வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு நிலம்
கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்புகாலனியில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தரிசாக காணப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து அந்த நிலத்தை சீர்படுத்தி கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தற்போது அரசு நிலங்களை மீட்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நேற்று காலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசாருடன் மஞ்சதோப்புகாலனிக்கு வந்து சம்பந்தப்பட்ட நிலத்தை சுற்றி முள்வேலி அமைக்க முயன்றனர்.
கஞ்சி காய்ச்சி போராட்டம்
இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் தாங்கள் பல ஆண்டுகாலமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அதிகாரிகள், போலீசாரின் வாகனங்களை சிறைபிடித்து சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கு கஞ்சி காய்ச்சும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தாசில்தார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் ''இந்த நிலத்தை சுற்றிலும் முள்வேலி போடாமல் தொடர்ந்து இளைஞர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக அனுமதிக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர். அதற்கு தாசில்தார், ''இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் பேசினேன். அவர் நிலத்தை சுற்றிலும் முள்வேலி அமைத்தாலும், அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் பாதை வசதிகள் அமைக்க கூறியுள்ளார்'' என்றார்.
இதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், ''நாங்கள் மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர் ஆகியோரை நேரில் சந்தித்து நிலத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்க கூடாது என கோரிக்கை வைக்க உள்ளோம். இதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். அதன்பிறகு உங்களுடைய நடவடிக்கைகளை தொடருங்கள்'' என்றனர்.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து தாசில்தார் வருகிற திங்கட்கிழமை வரை கால அவகாசம் கொடுத்து விட்டு பணியை நிறுத்திவிட்டு திரும்பி சென்றார். அத்துடன் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.