குடிநீர் குழாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குடிநீர் குழாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அழகியமண்டபம்:
வில்லுக்குறி அருகே உள்ள தோட்டியோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் பேயன்குழியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று பேயன்குழியில் உள்ள இந்த பாலத்தின் ஓரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக பாலத்தின் ஒரு புறத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 அடி ஆழத்திற்கு பாலத்தை உடைக்கும் பணி நடந்தது. இதைகண்ட அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த பணிகளால் பாலம் சேதமடையும் அபாயம் உள்ளது என குற்றம் சாட்டினர். மேலும், குழாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களை முற்றுகையிட்டனர். இதுபற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தரப்பில் பாலத்துக்கு எந்தவித சேதமும் இன்றி குழாயை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள் பாலத்தில் உடைத்த பகுதியில் நாங்கள் கான்கிரீட் போட்டு சரிசெய்து விடுவோம் என கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றதை தொடர்ந்து குழாய் அமைக்கும் பணி நடந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.