பிரார்த்தனை கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
நாகர்கோவில் வாத்தியார்விளையில் பிரார்த்தனைகூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி அங்கு இந்து அமைப்பினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வாத்தியார்விளையில் பிரார்த்தனைகூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி அங்கு இந்து அமைப்பினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரார்த்தனை கூடம்
நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுண்ட் தெருவில் வசிக்கும் ஒருவர் வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு பிரார்த்தனை கூடம் நடத்தி வந்தார். மேலும் அங்கு பிரார்த்தனை கூடம் கட்டும் பணியும் மேற்கொண்டார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. பிரார்த்தனை கூடம் கட்ட அனுமதி இல்லை என்றும், கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்றும் முடிவானது. அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்து அமைப்பினர் திரண்டனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரார்த்தனை கூடம் கட்டுமான பணிக்காக ஜல்லி, மணல் போன்றவை கொண்டு வரப்பட்டன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு நேற்று காலையில் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், பா.ஜனதா மண்டல பொறுப்பாளர் ராஜேஷ், அய்யப்பா சேவா சமாஜ மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா உள்பட இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு திரண்டிருந்த இந்து அமைப்பினரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு போலீசார் அழைத்து சென்றனர். பிரார்த்தனை கூடம் கட்டுமான பணி தொடங்கிய நபரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
பிரார்த்தனை கூடம் கட்ட கூடாது
பின்னர் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் இருப்பதால் பிரார்த்தனை கூடம் கட்ட அனுமதி இல்லை என்று கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.