கழிவு நீரேற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
காங்கேயநல்லூரில் நெற்களம் இருந்த இடத்தில் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கேயநல்லூரில் நெற்களம் இருந்த இடத்தில் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பு
காட்பாடி காங்கேயநல்லூரில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கேயநல்லூர், திருவள்ளுவர் நகர், வெள்ளை கல்மேடு, குமரன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரண்டு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்த காட்பாடி துணை போலீஸ் சூப்பரண்டு பழனி, மாநகராட்சி கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து இதற்கு நிரந்தர தீர்வு காண கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது என கூறி விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நிலத்தடி நீர் பாதிக்கும்
காங்கேயநல்லூரில் நெற்களத்தை இடித்துவிட்டு அதில் பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையம் அமைத்து வருகிறார்கள். இந்த பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தின் அருகே கோவில்கள், கல்லூரிகள், தேவாலயம் உள்ளன. கிருபானந்த வாரியார் நினைவு மண்டபம் மிக அருகில் அமைந்துள்ளது.
கழிவுநீரேற்று நிலையம் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும். மண்ணின் தன்மை கெட்டு விவசாயம் மற்றும் குடிநீர் கெட்டுப்போக அதிகளவு வாய்ப்பு உள்ளது என்றனர்.