ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்ப சென்றனர்.
நாகர்கோவில்:
ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்ப சென்றனர்.
ஆக்கிரமிப்பு வீடுகள்
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பாதைைய ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக தனியார் ஒருவர் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் கோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்பை அகற்ற தர்மபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் பி.ரெங்கநாயகி கணேசன், ஊராட்சி செயலாளர் பாமா ஆகியோர் நேற்று காலையில் பொக்லைன் எந்திரத்துடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ''நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த இடத்தில் வசித்து வருகிேறாம். இங்கிருந்து எங்களை அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்'' என்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ராமலெட்சுமி, ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி பாத்திமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) கனகபாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ''நாங்கள் உடனடியாக வீடுகளை காலி செய்து விட்டு மாற்று இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளோம். இதனால் எங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து மாற்று இடம் தர வேண்டும். அத்துடன் வீடுகளை காலி செய்ய எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்'' என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.