அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரை அடுத்த பெருமுகை-அரும்பருத்தி பாலாற்றங்கரையோரம் 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணல் அள்ளப்பட்டு, லாரி, டிராக்டர்கள் மூலம் பெருமுகையில் உள்ள மணல் விற்பனை மையத்தில் சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெருமுகை பாலாற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டின் அருகே அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி அவற்றை லாரிகளில் நிரப்பியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று அனுமதி இல்லாத இடத்தில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அங்கு வரிசையாக நின்று கொண்டிருந்த லாரிகளை சிறைபிடிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மணல் குவாரிக்காக அனுமதி பெற்ற பாலாற்றங்கரையோர இடங்களில் மட்டும் மணல் அள்ளும்படியும், ஒகேனக்கல் குடிநீர் குழாய் தெரியும் வகையில் மணல் அள்ள வேண்டாம் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தினர். அதையடுத்து லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் அங்கிருந்து புறப்பட்டு வேறு பகுதிக்கு சென்றன.