வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

குமரி-கேரள எல்லை பகுதியில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

அருமனை:

குமரி-கேரள எல்லை பகுதியில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறை சோதனைச்சாவடிக்கு...

குமரி-கேரள எல்லை பகுதியில் ஆறுகாணி மலையோர கிராமம் உள்ளது. இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளை இணைக்கும் இணைப்பு பாதையாக ஆறுகாணி-வெள்ளறடை செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியில் பேணு, மருதம்பாறை, கற்றுவா போன்ற இடங்களில் வனப்பகுதிகளும் இருக்கிறது. இந்த வனப்பகுதிக்கு வெளியே ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன.

மலையோர கிராமங்களை இணைக்கும் வகையில் அருமனை-ஆறுகாணி நெடுஞ்சாலை உள்ளது. இங்கு எல்லை பகுதியில் ஆறுகாணி முடியும் இடத்தில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு

அதன்படி நேற்று மாலையில் வனத்துறையினர் அங்கு சோதனைச்சாவடி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனை அறிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் சோதனைச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆறுகாணி நெடுஞ்சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். உடனே அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நெடுஞ்சாலைக்கு குறுக்கே வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கக்கூடாது என்றனர். அப்போது சோதனைச்சாவடி அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இதனையும் மீறி மீண்டும் சோதனைச்சாவடி அமைக்க முற்பட்டால் போராட்டம் நடத்துவோம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story