வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பூதப்பாண்டி அருகே வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் ஊராட்சி பகுதியில் செக்கடி குளம் உள்ளது. இந்த குளம் பகுதியில் 7 பேர் கடந்த 20 ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடித்து அகற்ற கோர்ட்டு உத்தரவு அளித்தது. இதையடுத்து அந்த வீடுகளை அகற்றுவதற்காக நேற்று மதியம் தோவாளை தாலுகா தாசில்தார் வினைதீர்த்தான், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதம், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) நீல பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கோமளா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது வீடுகளை அகற்ற அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அருமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பால்மணி, தோவாளை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பூதலிங்கம் பிள்ளை, ஏசுதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வீடுகளை அகற்ற 15 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும், அந்த மக்களுக்கு வீரவநல்லூர் பகுதியில் இடம் வழங்க பரிசீலனை செய்யப்படும் என்றும் தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி அந்த பகுதியில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.