கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
நெல்லை பாலாமடையில் நெல் கொள்முதல் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை பாலாமடையில் நெல் கொள்முதல் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். நெல்லை அருகே பாலாமடையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பிச்சையா தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அதில், ''எங்கள் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொது கழிப்பிடம், திருமண மண்டபம், சாலைகள் உள்ள பகுதியில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்று இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி, ஊர் பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்திலும், நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொது மேலாளரிடமும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். எனவே விரைவில் மாற்று இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த சாலைகள்
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், ''நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக பாளையங்கோட்டை மார்க்கெட் முதல் சீவலப்பேரி, தச்சநல்லூர் முதல் நயினார்குளம் மார்க்கெட், டவுன் மவுன்ட் ரோடு முதல் குன்னத்தூர், பழைய பேட்டை முதல் டவுன் ஆர்ச் வரை மேலும் பால்கட்டளை, அழகநேரி, ரெட்டியார்பட்டி குடிசை மாற்று வாரியப் பகுதியில் உள்ள சாலைகள் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களை சூழ்ந்துள்ள பகுதிகள் என முக்கிய இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் போதுமானதாக இல்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலையில் படுத்து உருளும் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று கூறியுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நெல்லையில் இளம்பெண் சித்ராவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.
வங்கி கடன் தள்ளுபடி
நாங்குநேரி ஒன்றிய விவசாயிகள் சங்க உறுப்பினர் முருகதாஸ் கொடுத்த மனுவில், ''நாங்குநேரி தாலுகாவில் சராசரி மழை அளவை விட குறைவாக பெய்துள்ளதால் நாங்குநேரி தாலுகாவை வறட்சி தாலுகாவாக அறிவித்து விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில், ''வடக்கு தாழையூத்து பகுதியில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், பஸ் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் அந்த பஞ்சாயத்து பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை உடனே திறக்க வேண்டும். தாழையூத்து குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய உபகரணங்களை சுத்தம் செய்யவும், அங்கு போர்வெல் போட்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் செல்வகுமார், ஜாகீர் உசேன் ஆகியோர் மனு கொடுத்தனர்.