ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ளடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு
பொதுமக்கள் மனு
ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
சுகாதார சீர்கேடு
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஈரோடு கனிராவுத்தர் குளம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோடு கனிராவுத்தர் குளம் முதல் பவானி பிரதான ரோடு வரை செல்லும் சத்தி பவானி இணைப்பு ரோட்டில் டாஸ்மாக் கடை, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகள் அதிகமாக செயல்படுகின்றன. இவற்றில் இருந்து அதிக அளவிலான கழிவுகள் சாக்கடையில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இறைச்சி கடைகளின் அருகே கட்டி வைக்கப்பட்டு உள்ள மாடுகள், கன்றுக்குட்டிகள் இரவில் சத்தமிடுவதும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நோய்களும் பரவி வருகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
சுவாச பிரச்சினை
கொடுமுடி அருகே உள்ள புஞ்சை கிளாம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'புஞ்சை கிளாம்பாடி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் முறுக்கு உட்பட பல்வேறு பலகாரங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இங்கிருந்து எண்ணெய் புகை, மாவு, மசாலா பொடி காற்றில் கலப்பதால் சுவாசிக்க முடியவில்லை.
இதனால் சுவாச பிரச்சினை, மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கக்கூடாது' என்று தெரிவித்து இருந்தனர்.
வண்டிபாதை ஆக்கிரமிப்பு
தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கொடுத்திருந்த மனுவில், 'அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களிடம் அனலாக் நிலுவை தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கொடுத்திருந்த மனுவில், 'சென்னிமலை எக்கட்டாம்பாளையம் பகுதியில் வண்டிப்பாதை புறம்போக்கில் செல்லும் ரோட்டை கல்குவாரி உரிமையாளர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
இதேபோல் 163 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.