புன்னம் சத்திரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்: 50 பேர் மீது வழக்கு


புன்னம் சத்திரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்: 50 பேர் மீது வழக்கு
x

புன்னம் சத்திரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

குடிநீர் கேட்டு மறியல்

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி, புன்னம் சத்திரம் அருகே எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அந்த பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டு அதில் இருந்து காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போதுமான குடி தண்ணீர் வினியோகிக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று மதியம் காலிக்குடங்களுடன் புன்னம் சத்திரம் கடைவீதியில் ஈரோடு-கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

ேபாக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உங்களது கோரிக்கை குறித்து தெரிவித்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

50 பேர் மீது வழக்கு

இந்நிலையில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புன்னம் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், விஜய், சரவணன், பிரவீன், சுந்தரமூர்த்தி, ராமச்சந்திரன், சுதாகர், சுப்பிரமணி, பிரபு, பழனிச்சாமி, சரவணன், புஷ்பம், மரகதம், வெள்ளையம்மாள், அமாவாசை, திவ்யா, கோமதி, செல்வி, ராணி, துர்கா, சவுந்தர்யா, நந்தினி, நாகதேவி, சுதா, பாப்பாத்தி உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story