ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் முற்றுகை
பழனி வையாபுரிக்குளம் அருகே மதனபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள பாறைக்குழி பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து சில வீடுகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் முன்எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் தாசில்தார் பழனிசாமி மற்றும் அதிகாரிகள், போலீசார் வந்தனர்.
ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அருள்ஜோதி வீதியில் திரண்டனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்று இடம் வேண்டும்
அப்போது மதனபுரம் பகுதி பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், வையாபுரிக்குள ஆக்கிரமிப்பு வீடுகளை மட்டுமின்றி அனைத்து கட்டிடங்களை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் இதுதொடர்பான மனுவை பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
அப்போது இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர். இதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள், பழனி திருஆவினன்குடி அருகே குளத்துரோடு பகுதியில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.