ஓணம் விழா ரத்து செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


ஓணம் விழா ரத்து செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா ரத்து செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

தக்கலை:

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா ரத்து செய்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பத்மநாபபுரம் அரண்மனை

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் ஓணம் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஓணம் விழா நாட்களில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் கட்டி கேரள பாரம்பரிய முறைப்படி விழா நடைபெறும். இந்த விழாவில் அரண்மனையை பராமரித்து வரும் ஊழியர்கள், கேரள மாநில அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். மேலும் அரண்மனை நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு இடையே விளையாட்டு போட்டி நடத்தி பரிசுகள், ஓண விருந்து அளித்து மகிழ்விப்பார்கள்.

ஓணம் விழா ரத்து

இதுதவிர அரண்மனை கட்டிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிட வசதியாக இரவு 10 மணி வரை அரண்மனையின் முன்வாசல் கதவை திறந்து வைத்திருப்பார்கள். இது தான் காலம், காலமாக பின்பற்றும் நடைமுறையாக உள்ளது.

ஆனால் இந்த வருடம் அரண்மனையில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அரண்மனை களையிழந்து காட்சி அளித்தது. இது பாரம்பரியத்தை மீறும் செயல் என உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் நேற்று காலை அரண்மனை முன்பு பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் குதித்தனர். கேரள அரசை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஊர் மக்கள் சார்பில் ஜெயச்சந்திரன், விஜயன், பரமேஸ்வரன், மக்கள் பிரதிநிதிகள் சார்பில் பத்மநாபபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன், கவுன்சிலர்கள், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story