நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம்-கருங்கல் சாலை விரிகோட்டில் ெரயில்வே கிராசிங் உள்ளது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் மார்க்கத்தில் ெரயில்கள் சென்று வரும் போதும், குழித்துறை ெரயில் நிலைய சிக்னல் கிடைக்காத நேரங்களிலும் அடிக்கடி கிராசிங்கில் கேட் பூட்டப்படுகிறது. இதனால், பொதுமக்களும் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மார்த்தாண்டம்-கருங்கல் சாலையில் விரிகோடு ெரயில்வே கேட் அமைந்திருக்கும் பகுதி வழியாக மேம்பாலம் அமைக்க நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாற்றுப்பாதையில் மேம்பாலம் அமைக்க நில அளவீடு பணிக்காக அதிகாரிகள் பலமுறை வந்தபோது பொதுமக்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மாவட்ட பொறியாளர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மீண்டும் நில அளவீடு பணிக்காக வந்தனர். இதையறிந்த காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். மேலும், விஜயதரணி எம்.எல்.ஏ.வும் அங்கு வந்தார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களும் அங்கு திரண்டனர்.
அப்போது, மாற்றுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கூடாது, விரிகோடு வழியாகத்தான் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விஜயதரணி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் மேம்பாலத்தை மாற்றுப்பாதையில் அமைக்க கூடாது, அதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, அந்த வழியாக சென்ற ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பணியை கைவிட்டு விட்டு திரும்பிச் சென்றனர். இதையடுத்து பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.