ஆலையின் பாதையை அடைத்து பொதுமக்கள் போராட்டம்
ஆலையின் பாதையை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி:
செண்பகராமன்புதூர் சிதம்பரபுரம் பகுதியில் ஒரு தனியார் நவீன அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சுற்றிலும் 300 வீடுகள் உள்ளன. சமீபகாலமாக இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கருநிறச் சாம்பல் கழிவு காற்றுடன் கலந்து வீடுகளில் எல்லா அறைகளுக்குள்ளும் விழுந்து குவியலாக கிடக்கிறது. மேலும், கழிவுகள் பொதுமக்களின் சுவாசத்துடன் உடலுக்குள் சென்று மூச்சுதிணரலை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி பொதுமக்கள் தரப்பிலும், ஊராட்சி தரப்பிலும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கழிவுகள் அதிகமாக வெளியேறி வீடுகளுக்குள் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செண்பகராமன்புதூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் தலைமையில் நவீன அரிசி ஆலைக்கு வாகனங்கள் செல்லும் பாதையில் ஆட்கள் செல்லும் வகையில் இடைவெளி விட்டு கல் நாட்டி அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் தரப்பில் எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரை பாதையை திறக்க மாட்டோம் என கூறினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீனா அரிசி ஆலை நிர்வாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.