தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
நடைபாதையில் முள்வேலி போட்டு அடைத்ததை கண்டித்து நம்பியூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பியூர்:
நடைபாதையில் முள்வேலி போட்டு அடைத்ததை கண்டித்து நம்பியூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முள்வேலி போட்டு அடைப்பு
நம்பியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி ஓணாண்கரடு, மேட்டுக்காடு. இதில் ஓணாண்கரடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக சுட்டிக்கல்மேடு - குருமந்தூர் சாலையில் உள்ள காலனி பிரிவில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வண்டிபாதையை நடைபாதையாக பயன்படுத்தி சென்று வந்தனர். பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த நடைபாதையை, அதே பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி அந்த நடைபாதையில் முட்களை வெட்டி போட்டு வேலி அமைத்து உள்ளார். இதனால் அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும், தனி நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்
இந்த நிலையில் ஓணான்கரடு, மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று நம்பியூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வண்டிபாதையில் உள்ள முள்வேலி தடுப்பை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், அலுவலகத்தின் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், 'இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதைத்தொடர்ந்து தங்களுடைய போராட்டத்தை பொதுமக்கள் கைவிடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.