கடையத்தில் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


கடையத்தில் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் மற்றும் தனியார் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து ராட்சத லாரிகள் மூலம் கனிம வளங்களை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கடையத்தில் இருந்து ஆலங்குளம், முக்கூடல் உட்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கீழக்கடையம் ரெயில்வே சாலையும் மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து, அந்த சாலையில் ராட்சத லாரிகள் செல்ல முடியாதவாறு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டி போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்றும் அந்த பகுதியில் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை பஞ்சாயத்து தலைவர் தலைமையில் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story