மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x

மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

ஆத்திக்காட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் கூட்டுக் குடிநீர் குழாய் செல்கிறது. அந்த கூட்டுக் குடிநீர் குழாயில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது.

மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான பள்ளமும் உருவாகி உள்ளது. இந்தநிலையில் ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி தலைவர் பேரின்ப விஜயகுமார் எடுத்த நடவடிக்கையின் மூலம் குழாயில் ஏற்பட்ட உடைப்பு நேற்று முன்தினம் சரி செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் நேற்று அதிகாலையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி தலைவர் பேரின்ப விஜயகுமார் தலைமையில் பொதுமக்கள் நேற்று இரவு 9 மணிக்கு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்காலிகமாக பணியை மேற்கொள்ளப்போவதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்தால் தான் இந்த பணியை மேற்கொள்ள விடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரைகுறையாக பணியை முடித்து விட்டு செல்கிறார்கள். தற்போது தற்காலிகமாக பணியை செய்தால் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்படும். மேலும் இந்த பகுதியில் நாளை (அதாவது இன்று) உறியடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியில் பள்ளத்தை உடனடியாக மூடவும், தற்காலிகமாக பணியை மேற்கொள்ளக்கூடாது என்றும். அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என கூறியபடி பொதுமக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

ஆனால் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டக்காரர்கள் சமரசம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க நான் முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story