சாலையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் மறியல்


சாலையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 9:38 PM IST)
t-max-icont-min-icon

குமரி-கேரள எல்லையில் சாலையில் தண்ணீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

அருமனை:

குமரி-கேரள எல்லையில் சாலையில் தண்ணீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை விரிவாக்க பணி

குமரி, கேரள எல்லைப் பகுதியில் பாறசாலை முதல் நெடுமங்காடு வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலையில் நீண்ட தூரம் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கோரி நேற்று செறியகொல்லை பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளறடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பொதுமக்கள் பலரும் தண்ணீர் தேங்கி கிடந்த இடத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

தள்ளு முள்ளு

போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில போலீசாரின் சீருடை கிழிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். உடனே அந்த பகுதியில் உள்ள பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மேலும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அய்யப்ப பக்தர்கள்

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து வெள்ளறடை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டதில் பலர் அய்யப்ப பக்தர்கள் ஆவார்கள். அவர்கள் சபரிமலைக்கு போக வேண்டியது இருந்ததால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் செறியகொல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story