வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் மறியல்
வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவில் மழைநீர் வடிவதில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வடிகால் வசதி செய்து தரக்கோரி நேற்று கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தா.பழூர் - ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஏற்கனவே அந்த இடத்தில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாகவும், வடிகால் ஏற்படுத்தும் இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டிய நிலை உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.