பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமைவாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. ஆதிதிராவிட மக்களை, இக்கோவிலுக்கு உள்ளே சென்று வழிபட அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரியும், பட்டியல் இன மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாததை கண்டித்தும், பட்டியல் இன மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி கூறுகையில், மேல்பாதி கோவிலுக்குள் சென்று வழிபட உடனே அனுமதி வழங்கப்படும், அதற்கு நான் பொறுப்பு, இங்கிருக்கிற மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் பொறுப்பு, போலீஸ் பாதுகாப்புடன் சென்று கோவிலில் வழிபட உங்களுக்கு அனுமதி வழங்கப்படும். யார் தடுத்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆவணங்களை ஒப்படைக்க முடிவு

இந்நிலையில் நேற்று காலை பட்டியலின மக்கள், போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவிலுக்குள் சென்று வழிபட இருப்பதாக மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். மேலும் அவர்கள், தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து அந்த ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகம் செல்ல முயன்றனர்.

பொதுமக்கள் தர்ணா

உடனே அவர்களை வளவனூர் போலீசார் தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கோவில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் சிலர், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை வீசி எறிந்து போராட்டம் செய்தனர்.

3 பேர் தீக்குளிக்க முயற்சி

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செல்வராஜ் (வயது 42), வீரமணி (48), ஜோதி (50) ஆகிய 3 பேர் திடீரென அருகில் உள்ள தங்கள் வீட்டிற்கு சென்று மண்எண்ணெயை எடுத்து வந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், கோவில் பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அனைவரும் சற்று அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story