வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
திருச்செந்தூரில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் யூனியன், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நா.முத்தையாபுரம், நடுநாலுமூலைக்கிணறு, கீழநாலுமூலைக்கிணறு, தளவாய்புரம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை. நா.முத்தையாபுரத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் நடத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்தும் நாளை (திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து கீழநாலுமூலைகிணறு, நா.முத்தையாபுரம் பகுதிகளில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.