சாலையில் பள்ளம் ேதாண்டி பொதுமக்கள் போராட்டம்
கற்கள் ஏற்றி வரும் டாரஸ் லாரிகள் செல்ல முடியாத வகையில் கீழக்கடையத்தில் சாலையில் பள்ளம் தோண்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கடையம்:
கடையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து, டாரஸ் லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக கீழக்கடையம் ரெயில்வே சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுதொடர்பாக கடையம் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக குவாரியை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றியும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்தும், உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து நேற்று கற்களை ஏற்றி வரும் லாரிகள் செல்லாத வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் கீழக்கடையம் ெரயில்வே சாலையில் 5 அடி தூரம் பள்ளம் தோண்டி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.