கீழையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.3.80 கோடியில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
கீழையூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.80 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலூர்
கீழையூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.80 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 744 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மேலூர் பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. எனவே, விவசாயத்தில் எப்படியெல்லாம் வருமானம் ஈட்டலாம் என்றும், மகசூலை அதிகளவில் பெருக்குவது எவ்வாறு என்பது குறித்தும் நில அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய தொழில்களுக்கு தேவையான முதலீட்டினை கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கடன்களை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் விவசாயிகள் மூலம் நெற்பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல, சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி பயிரிட வேண்டும்.
திறன் வளர்ப்பு பயிற்சி
ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களும், இளைஞர்களும் வேலைவேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திகழ வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் புரிவதற்கு உண்டான மனநிலை இருந்தால் போதும் திறமைகளை வளர்த்து கொள்வதற்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக உதவித்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, முதலீட்டுக்கு தேவையான கடனுதவியை 30 சதவீதம் மானியத்துடன் தமிழக அரசு வழங்கி வருகின்றது என்று பேசினார்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகிபிரமிளா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மேலூர் தாசில்தார் சரவணபெருமாள், கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் சீலா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.