விழுப்புரம் அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


விழுப்புரம் அருகே  ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

விழுப்புரம் அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

ஏரி ஆக்கிரமிப்பு

விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் மற்ற விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

எனவே இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அக்கிராம மக்கள், விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியினரும், வி.அகரம் கிராம பொதுமக்களும் இணைந்து அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரி ஆக்கிரமிப்பினால் தற்போது ஏரியை காணவில்லை, அதனை கண்டுபிடித்துத்தர வேண்டுமென அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுபற்றி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story