2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
செங்கம்
செங்கம் அருகே 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மற்றொரு சம்பவம்
செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தில் ஒரு மாத காலமாக பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலையின் நடுவே கயிறு கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.