அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதி
ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தபகுதிகளில் போதுமான அளவு குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க பொது மக்கள் அளிக்கும் வைப்பு தொகைக்கான ரசீது முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஏற்கனவே ரூ.5 ஆயிரம் வரை பணம் கட்டிய மக்களுக்கு பல மாதங்களாகியும் இது வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
பல தெருக்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக, கற்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் நேரில் வந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட பொது மக்கள் மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சமுசிகாபுரம் - முதுகுடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.