அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருக்குவளை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி:
திருக்குவளை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
திருக்குவளை அருகே வாழக்கரையில் நீண்ட காலமாக பழுதடைந்துள்ள தெற்குத்தெரு சாலையை உடனே செப்பனிட வேண்டும். தர்மர் மண்சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும். வாழக்கரையில் உள்ள மயான கொட்டகையை சுற்றி மதில் சுவர் அமைத்து தர வேண்டும். வாழக்கரையில் இருந்து ஈசனூர் வரை செல்லும் தார் சாலையை சரி செய்து மின்இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாழக்கரை ஊராட்சியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கிளை செயலாளர் அன்பழகன் மற்றும் தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகையன், சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதில் கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் பேசினார். இது குறித்து தகவல் அறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாத உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் திருக்குவளை -மேலப்பிடாகை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.