சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

செய்யாறு அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கொருக்கை கிராமத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரியும், முறையாக தடையில்லாமல் குடிநீர் வினியோகிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் செய்யாறில் உள்ள கொருக்காத்தூர் சாலையில் இன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கொருக்கை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி பழுதானது.

இதையடுத்து 2021-ம் ஆண்டு ஊராட்சியின் நிதி திட்டத்தில் 14 லட்சம் மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

அதில் தண்ணீர் ஏற்றி பரிசோதனை செய்தபோது புதிய தொட்டியில் இருந்து தண்ணீர் கசித்ததால் தற்போது வரை அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது.

பேச்சுவார்த்தை

அதனால் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இவ்வாறு வினியோகிக்கும் தண்ணீர் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை.

அதனால் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தார் சாலையை செப்பனிட்டு தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அடிப்படை வசதிகள் நிறைவேற்ற துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story