திருமானூரில் பொதுமக்கள் சாலை மறியல்; 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன


திருமானூரில் வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

இருதரப்பினர் இடையே மோதல்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் இருபிரிவை சேர்ந்த இளைஞர்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெரியசாமி என்பவரின் மகன் குமரவேல் (வயது 22), சரவணன் மகன் விநாயகம் (23) ஆகியோர் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அதிருப்தி அடைந்த ஒரு பிரிவை சேர்ந்த பொதுமக்கள் வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருமானூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் திருமானூர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story